Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை , 02 ஜூலை (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்தும், சுப்புராஜ் என்பவருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, கிராம உதவியாளர் அதே கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏற்கனவே திருத்தப்பட்டு நீக்கப்பட்டுவிட்டதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், கிராமத்தைச் சேர்ந்தவர் உதவியாளராக தேர்வு செய்யப்படவில்லை என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
செல்லப்பநாயக்கன்பட்டி கிராம உதவியாளராக மூன்றாவது எதிர்மனுதாரர் நியமிக்கப்பட்டதில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, நியமனத்தை ரத்து செய்யக் கோரிய மனுவையும், பணியிட நிரப்பல் அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விதிமுறைகள் திருத்தப்பட்ட பின்னர், கிராமத்தில் வசிக்கும் நிபந்தனை கட்டாயம் இல்லை என்பதால், தேர்வு செயல்முறையில் தவறு இருப்பதாகக் கூற முடியாது என நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.
இதன் மூலம் திண்டுக்கல் மாவட்ட கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தடை நீங்கியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b