Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)
லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவின் பணியிடை நீக்கத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவில் காவல் ஆய்வாளராக பணியாற்றியபோது, ராஜலட்சுமி என்பவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவை, கடந்த ஜூன் 17-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து விமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரின் ஒப்புதலுக்குப் பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆய்வாளர் விமலாவுக்கு எதிரான பணியிடை நீக்க உத்தரவு உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது என்று கருத்து தெரிவித்து, அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆய்வாளர் விமலா ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக தீவிர குற்றச்சாட்டு உள்ளதாகவும், அவருக்கு எதிராக குற்றக் குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒரு குற்றக் குறிப்பாணையும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் உள்ள நிலையில், விசாரணையைத் தொடர தனி நீதிபதி விதித்த இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விமலாவை பணியிடை நீக்கம் செய்ததற்கான ஆதாரங்களை தனி நீதிபதி முன் அரசுத் தரப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், பணியிடை நீக்கத்துக்கு தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைத்து, அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P