Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 02 ஜூலை (ஹி.ச.)
திருவள்ளூர் அருகே ஈக்காடு ஏரியில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற முயன்றதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தில் 356 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை 40 ஆண்டுகளுக்கும் மேலாக 50-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து செங்கல் சூளைகள் அமைத்தும், விவசாயம் செய்தும் வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டு திருவள்ளூர் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, இனி யாரும் ஏரிப்பகுதியில் விவசாயம் செய்யக்கூடாது என்றும், ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி நீர் சேமிப்பு திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக ஏரியை மேம்படுத்தும் பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்த சிலர் மீண்டும் ஏரிப்பகுதியில் நெல் சாகுபடி செய்தனர். இதையடுத்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் நெற்பயிரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள், பயிர்களை அழிக்கக் கூடாது எனக் கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தற்போது விளைந்துள்ள நெற்பயிரை அறுவடை செய்யும் வரை அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதன்பிறகு ஏரிப்பகுதியில் மீண்டும் விவசாயம் செய்யமாட்டோம் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள், தங்களது கோரிக்கையை மனுவாக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து விவசாயிகள் அமைதியடைந்தனர். இந்த சம்பவம் ஈக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / GOKILA arumugam