Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்ட மறுசீரமைப்பு குழுவின் நிர்வாகிகளுடன் கட்சித் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சந்தித்த தோல்வியின் எதிரொலியாக திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், சக்கரபாணி உள்ளிட்ட ஒன்பது மூத்த நிர்வாகிகளைக் கொண்டு இந்த மறுசீரமைப்பு குழு சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் தொடங்கி, மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், கிளைக் கழகம் வரையிலான அனைத்து நிலைகளிலும் கட்சியின் அமைப்பை முழுமையாக மாற்றியமைத்து, மேலும் வலுவூட்டும் திட்டத்தை இக்குழு மேற்கொள்ள உள்ளது.
சார்பு அணிகளின் செயல்பாடுகளையும் மறுஆய்வு செய்து புதிய உத்வேகம் அளிக்கும் பணிகளும் இதில் அடங்கும்.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், மறுசீரமைப்பு குழுவினரின் செயல்பாட்டு வரைவு, அவர்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகள், கள ஆய்வுக்கான வழிமுறைகள் மற்றும் காலக்கெடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விரிவாக விவாதிக்க உள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, அடிமட்ட அளவில் கட்சியை பலப்படுத்தவும், புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பளித்து இளைஞர்கள் மற்றும் மகளிரின் பங்களிப்பை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவின் பணிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக ஆலோசிப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / vidya.b