Enter your Email Address to subscribe to our newsletters

மாமல்லபுரம், 02 ஜூலை (ஹி.ச.)
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மிகுந்த மனவேதனையுடன் அதிமுகவில் இருந்து வெளியேறுகிறேன் என உருக்கமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார். நாங்கள் கூறும் எந்த ஆலோசனையையும், கருத்தையும் கேட்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை.
தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாத சூழல் நிலவுகிறது என குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து தனது அடுத்த அரசியல் நகர்வு குறித்து விளக்கிய ஆனந்தன், மக்கள் பணியை எந்தவித தடையும் இல்லாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தமிழக வெற்றி கழகத்தில் இன்று இணைய முடிவு செய்துள்ளேன் என்றார்.
தமிழக வெற்றி கழக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.
அதிமுகவில் திருப்பூர் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக அறியப்பட்ட எம்.எஸ்.எம். ஆனந்தன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
அவரது இந்த விலகல், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
அதேநேரம், தமிழக வெற்றி கழகத்திற்கு இது குறிப்பிடத்தக்க பலமாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
Hindusthan Samachar / vidya.b