அமர்நாத் யாத்திரை நாளை தொடக்கம் -பஹல்காம், பல்தால் வழித்தடங்களில் பக்தர்கள் புறப்பாடு
ஸ்ரீநகர் , 02 ஜூலை (ஹி.ச.) ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகப் புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோவிலுக்கான ஆண்டு புனித யாத்திரை நாளை (ஜூலை 3) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்கள் பஹல்காம் மற்றும் பல்தால் எனும் இரு முக்கிய வழித்தடங்களிலும் புனித பயணத்தை த
A


ஸ்ரீநகர் , 02 ஜூலை (ஹி.ச.)

ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகப் புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோவிலுக்கான ஆண்டு புனித யாத்திரை நாளை (ஜூலை 3) தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு, பக்தர்கள் பஹல்காம் மற்றும் பல்தால் எனும் இரு முக்கிய வழித்தடங்களிலும் புனித பயணத்தை தொடங்கியுள்ளனர்.

யாத்திரை தொடக்க விழாவை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவில் இந்துக்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றாகும். இங்கு இயற்கையாக உருவாகும் பனி சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான யாத்திரை 57 நாட்கள் நடைபெற உள்ளது. அதன்படி ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 28 வரை நடைபெறும் இந்த புனித பயணம், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள நுன்வான்–பஹல்காம் வழித்தடம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பல்தால் வழித்தடம் ஆகிய இரு பாதைகளிலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.

இதில் பஹல்காம் வழித்தடம் சுமார் 48 கி.மீ. நீளமுடைய பாரம்பரிய மலைப்பாதையாகும். பல்தால் வழித்தடம் சுமார் 14 கி.மீ. தூரம் கொண்டதாக இருந்தாலும், செங்குத்தான மற்றும் கடினமான மலைப்பாதை என்பதால் சவாலானதாக கருதப்படுகிறது.

யாத்திரை பாதுகாப்பு கருதி ஜம்மு காஷ்மீர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், மருத்துவ வசதி, கண்காணிப்பு மற்றும் அவசர மீட்பு நடவடிக்கைகளும் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பனி சிவலிங்க தரிசனத்திற்காக நடைபெறும் இந்த புனித யாத்திரை இந்த ஆண்டும் பெரும் பக்தி உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA