Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)
முதல்வர் விஜய் நடித்ததாகக் கூறப்படும் 'ஜனநாயகன்' திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, பலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரஜினி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சி. குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்ட 'ஜனநாயகன்' திரைப்படத்தை இதுவரை சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், வழக்கில் தொடர்புடைய இரு குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டால் ஆதாரங்களை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், வழக்கின் புலனாய்வு இன்னும் நிறைவடையாததால் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சி. குமரப்பன், வழக்கின் தன்மை மற்றும் விசாரணை நிலையை கருத்தில் கொண்டு, ரஜினி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ