Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்தின் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டின் கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அமைச்சர் ராஜேஷ்குமார் வெளியிட்ட பதிவில்,
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தாரகை கத்பட் மற்றும் டி.டி. பிரவீன் ஆகியோருடன் இணைந்து முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்ததாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 10-ஆம் தேதி இயற்கை வளங்கள் துறை வெளியிட்ட அரசாணை மூலம், இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அணுக்கனிம சுரங்க நில ஒதுக்கீட்டின் கால அவகாசம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அரசாணையை மறுபரிசீலனை செய்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம் மற்றும் கொல்லங்கோடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் அணுக்கனிம சுரங்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், உடல்நலம் மற்றும் கடலோரச் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்பதையும் முதலமைச்சரிடம் விளக்கமாக எடுத்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை கவனமாக கேட்ட முதலமைச்சர், மக்களைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. உங்கள் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக அமைச்சர் ராஜேஷ்குமார் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P