Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 02 ஜூலை (ஹி.ச.)
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகாவில் உள்ள மதபட்டணா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல் குவாரியில் இன்று காலை எதிர்பாராத விதமாக பாறை சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
குவாரியில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென பெரிய பாறை ஒன்று சரிந்து விழுந்ததில், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் பாறைகளின் அடியில் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.
இருப்பினும், பாறைகளின் அடியில் சிக்கிய 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே இந்த துயரச் சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்துள்ளார்.
அத்துடன், கல் குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குவாரி உரிமையாளர்களின் கடமை என்றும், விதிமுறைகளை மீறும் குவாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA