மயிலாடுதுறை காதல் ஜோடி உயிரிழப்பு -திருமாவளவனுடன் பேசப்பட்டதாகக் கூறப்படும் ஆடியோ வைரல்
மயிலாடுதுறை, 02 ஜூலை (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டத்தில் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் ஆணவக் கொலை எனக் கூறப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தி
திருமாவளவன்


மயிலாடுதுறை, 02 ஜூலை (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டத்தில் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் ஆணவக் கொலை எனக் கூறப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் கட்சி நிர்வாகி ஒருவர் பேசுவதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகி வரும் அந்த ஆடியோவில், உயிரிழந்த இளம்பெண் பிரியதர்ஷினியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளதாக நிர்வாகி ஒருவர் தெரிவிப்பதாகக் கேட்கப்படுகிறது.

மேலும், உயிரிழந்த இளைஞர் பார்த்திபனின் பிரேதப் பரிசோதனை இன்னும் நடைபெறாத நிலையில், அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.

அதில், பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் உடலை அடக்கம் செய்து விடலாமா? என்று நிர்வாகி கேட்பதற்கும், அதற்கு திருமாவளவன் பதிலளிப்பதுபோலவும், மேலும் எம்பாமிங் செய்து மறுபிரேதப் பரிசோதனைக்கு செல்ல வேண்டுமா? என்ற கேள்விக்கும், தற்போது முறையாகவே பிரேதப் பரிசோதனை நடைபெறுகிறது; அதன் பிறகு ஏன் மறுபிரேதப் பரிசோதனை? என்று பதிலளிப்பதுபோலவும் ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதனால், சமூக வலைதளங்களில் இந்த ஆடியோ வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam