துணை மருத்துவப் படிப்புகளுக்கு முதல்முறையாக கல்விக் கட்டணம் நிர்ணயம் - கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரை
தமிழ்நாடு, 02 ஜூலை (ஹி.ச) தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எஸ்்சி., பி.பார்ம்., பி.பி.டி., டிப்ளமோ மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை முதல்முறையாக சுயநிதி தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக்
mbbs


தமிழ்நாடு, 02 ஜூலை (ஹி.ச)

தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எஸ்்சி., பி.பார்ம்., பி.பி.டி., டிப்ளமோ மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை முதல்முறையாக சுயநிதி தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசு கல்லூரிகளில் அரசே கட்டணத்தை நிர்ணயித்து வந்த நிலையில், தனியார் கல்லூரிகள் தங்களது விருப்பப்படி கட்டணத்தை வசூலித்து வந்தன.

இந்த நிலையில், சுயநிதி தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழுத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையிலான குழு, கல்லூரிகளின் வரவு-செலவுக் கணக்குகளை ஆய்வு செய்து, 2026–27, 2027–28 மற்றும் 2028–29 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.

இந்தக் கட்டணத்தில் கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கைக் கட்டணம், சிறப்புக் கட்டணம், நூலகம், கணினி, இணையம், விளையாட்டு, பராமரிப்பு மற்றும் பிற திறன் மேம்பாட்டுக் கட்டணங்கள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

மாணவர்களின் பயிற்சிக் காலத்திற்கு (Internship/Training) எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும், இந்தக் கட்டணம் மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் குழு தெரிவித்துள்ளது.

தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 65 சதவீத இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 35 சதவீத இடங்களும் நிரப்பப்பட வேண்டும். சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலும், நிர்வாக ஒதுக்கீட்டிலும் தலா 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிப்ளமோ சுகாதார ஆய்வாளர் (Health Inspector), சானிட்டரி இன்ஸ்பெக்டர் (Sanitary Inspector) படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டில் ரூ.70 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் ரூ.35 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டில் ரூ.75 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துணை செவிலியர் மற்றும் மகப்பேறு பட்டயப் படிப்பு (ANM)க்கு அரசு ஒதுக்கீட்டில் ரூ.30 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டில் ரூ.60 ஆயிரமும், டிப்ளமோ பார்மசி படிப்புக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரமும், டிப்ளமோ மெடிக்கல் லேபரட்டரி சயின்ஸ் (DMLS) படிப்புக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.40 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ் சி. நர்சிங் மற்றும் போஸ்ட் பி.எஸ்்சி. நர்சிங் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் ரூ.60 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டில் ரூ.1.20 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பி.பார்ம்., பி.பி.டி., பி.ஓ.டி., பி.பார்ம். லேட்டரல் என்ட்ரி மற்றும் இளநிலை அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் ரூ.50 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து, விடுதி மற்றும் உணவகக் கட்டணங்களை கல்வி நிறுவனங்கள் தனியாக வசூலிக்கலாம். ஆனால் நன்கொடை வசூலிக்கக் கூடாது.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரைக்கப்படும் என்றும் கல்விக் கட்டண நிர்ணயக்குழு எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ