Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூலை (ஹி.ச)
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வரும் ராஜேஷ் குமார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தாரகை கத்பர்ட் மற்றும் பிரின்ஸ் ஆகியோருடன் இணைந்து இன்று தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுகனிம சுரங்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஓராண்டு கால நீட்டிப்பு அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சரிடம் அமைச்சர் ராஜேஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
அணு கனிமங்களை வெட்டி எடுக்கும் இந்த சுரங்கத் திட்டத்திற்கு சமீபத்தில் அரசு ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பின் போது, அணுகனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜேஷ் குமார் விரிவாக எடுத்துரைத்தார்.
கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராம மக்களும் இத்திட்டத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என சட்டமன்ற உறுப்பினர்களும் சுட்டிக்காட்டினர்.
எனவே மக்களின் நலன் கருதியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அணுகனிம சுரங்கத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b