ரூ.4 கோடி பணம் பறிமுதல் வழக்கு- ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நயினார் நாகேந்திரன் ஆஜர்
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) 2024 மக்களவைத் தேர்தலின்போது ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று கொண்டிருந்த
நயினார்


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

2024 மக்களவைத் தேர்தலின்போது ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்று கொண்டிருந்தபோது, நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.4 கோடி பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனின் தொகுதி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் முன்னாள் அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், எஸ்.ஆர். சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், 13 பேருக்கு எதிராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகலைப் பெறுவதற்காக நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஜார்ஜ் டவுன் மேஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுந்தரபாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 11 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானனர். குற்றஞ்சாட்டப்பட்ட கோவர்தன் மற்றும் விக்னேஷ் (என்ற கணேஷ்) ஆகிய இருவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி சுந்தரபாண்டியன், அன்றைய தினம் அனைத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அப்போது அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P