மாதம் ஒருமுறை மின் கட்டண முறை அமல்படுத்த தாமதம் ஏன்? – தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) தமிழகத்தில் மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீட்டு முறையை அமல்படுத்துவதில் தாமதம் ஏன் ஏற்பட்டுள்ளது என்று, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 20
நயினார் நாகேந்திரன்


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்தில் மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீட்டு முறையை அமல்படுத்துவதில் தாமதம் ஏன் ஏற்பட்டுள்ளது என்று, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2026 சட்டமன்றத் தேர்தலின்போது தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடைமுறையில் உள்ள மின் கட்டண கணக்கீட்டு முறையை ரத்து செய்து, மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடும் முறை அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தவெக அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையிலும், மக்கள் இன்னும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தி வருவதாகவும், இதனால் அவர்கள் சிரமத்திற்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முந்தைய திமுக அரசைப் போலவே தவெக அரசும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள நயினார் நாகேந்திரன், அந்த அச்சத்தைப் போக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது மாநிலத்தில் மின்வெட்டு பிரச்சினைகள் மற்றும் மின்சார வாரியத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில், மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீட்டு முறையை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணத்தை அரசு மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மின் தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்து, தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீட்டு முறையை காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam