வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் - மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தல்
புதுடெல்லி, 02 ஜூலை (ஹி.ச.) அருணாசலப் பிரதேசம், அசாம், மேகாலயா மற்றும் சிக்கிமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பல உயிர்களை பறித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தோர
கார்கே


புதுடெல்லி, 02 ஜூலை (ஹி.ச.)

அருணாசலப் பிரதேசம், அசாம், மேகாலயா மற்றும் சிக்கிமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பல உயிர்களை பறித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, வடகிழக்கு மாநிலங்களில் இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருடனும் உறுதுணையாக நிற்கிறேன் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

வடகிழக்கு மாநிலங்களை வெள்ளமில்லா பகுதிகளாக மாற்றுவோம் என்று 'இரட்டை என்ஜின்' பாஜக அரசுகள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் கலந்துவிட்டன. ஆண்டுதோறும் வெள்ளம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ, நீண்டகால வெள்ளத் தடுப்பு திட்டங்களோ செயல்படுத்தப்படவில்லை.

இந்தப் பேரிடரை வழக்கமான மீட்பு நடவடிக்கையாக மட்டும் மத்திய அரசு கருதக் கூடாது. பிரதமர் கேர்ஸ் (PM CARES) நிதியை உடனடியாகப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு, முழுமையான மறுவாழ்வு மற்றும் தொடர்ச்சியான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

மீட்புப் பணிகளில் இந்திய ஆயுதப்படைகள், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) ஆகியவை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றன. எனினும், இந்த மனிதாபிமான நெருக்கடியின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, கூடுதல் மீட்புப் படையினர், வளங்கள் மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு அவசரமாக ஒதுக்க வேண்டும். சேதமடைந்த உள்கட்டமைப்புகளை விரைவாக சீரமைத்து, எந்த ஒரு பாதிக்கப்பட்ட குடும்பமும் புறக்கணிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி, நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P