சிறையில் அடைக்க வந்த கைதி தப்பி ஓட்டம் - 2 காவலர்கள் சஸ்பெண்ட்
நெல்லை, 02 ஜூலை (ஹி.ச.) நெல்லை அடுத்த தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் ஆறுமுகக்கனி (வயது 22). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை தாழையூத்து போலீசார் ரவுடி பட்டியலில் வைத்து கண்காணித்து வந்தனர்.
Palayankottai Jail


நெல்லை, 02 ஜூலை (ஹி.ச.)

நெல்லை அடுத்த தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் ஆறுமுகக்கனி (வயது 22). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவரை தாழையூத்து போலீசார் ரவுடி பட்டியலில் வைத்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழையூத்து பகுதியில் நடந்த ஒரு திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய ஆறுமுக கனி நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் அவரை தனிப்படை போலீசார் கோவையில் கைது செய்து நேற்று காலையில் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நேற்று இரவு அவரை தாழையூத்து போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர்களான மல்லிகை ராஜ் மற்றும் பார்வதி ஆகிய 2 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு ஆட்டோவில் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தனர்.

அவர்கள் சிறை முன்பு வந்த போது, உள்ளே அழைத்து செல்வதற்காக ஆறுமுகக்கனி கையில் இருந்த விலங்கை போலீசார் அகற்றியுள்ளனர். அப்போது ஆறுமுகக்கனி அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டார்.

இதனையடுத்து நெல்லை மாவட்ட மற்றும் மாநகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உஷார்படுத்தப்பட்டனர். புதிய பஸ்நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதுதவிர சிறை அருகே ரெயில்வே தண்டவாளப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டு பகுதி அல்லது புதிய பஸ்நிலையம் அருகே உள்ள காட்டு பகுதியில் ஆறுமுகக்கனி தப்பிச்சென்று இருக்கலாம் என்பதால் போலீசார் டிரோன் மூலம் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர் எதிலும் தென்படவில்லை. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்- இன்ஸ்பெக்டர்கள் அருண் ராஜா, சுமன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடி ஆறுமுகக் கனியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனுடைய கைதியை சிறைக்கு கொண்டு செல்லும் பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி போலீஸ் ஏட்டுகள் மல்லிகைராஜ் மற்றும் பார்வதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் சாஸ்திரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN