Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
பின்னர், இந்த புகார் மனு, எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஜார்ஜ் டவுன் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. பொன்முடி தரப்பில், மூடிய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தொடர்பாக தனி நபர் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தாக்கல் செய்யும் முன் அரசின் அனுமதியை பெறவில்லை என்பதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என வாதிடப்பட்டது.
புகார்தாரரான உமா ஆனந்தன் தரப்பில், தன்னுடைய பேச்சு ஊடகங்களில் பரவும், பிற மதத்தினர் பார்ப்பார்கள் என்று தெரிந்தே பொன்முடி இந்த வெறுப்பு பேச்சை பேசியுள்ளார்.
இதே விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடர அரசிடம் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய பொன்முடியின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P