அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு புகார்- சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக நிர்வாகி மனு
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனங்கள் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழக (தவெக) வழக்கறிஞர் அணி நிர்வாகி ஒருவர் சென
உயர்நீதிமன்றம்


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனங்கள் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழக (தவெக) வழக்கறிஞர் அணி நிர்வாகி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் சாலாமேட்டைச் சேர்ந்தவரும், தவெக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளருமான எம். ஞானசௌந்தரி தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு ஜூன் 5-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் விண்ணப்பித்ததாக தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 29 மாலை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் பிற்பகலிலேயே தேர்வுப் பட்டியல் எனக் கூறி வாட்ஸ்அப்பில் தகவல் பரவியதாகவும், இதுகுறித்து தவெக மாவட்டச் செயலாளர் என். மோகன்ராஜிடம் கேட்டபோது அதுவே இறுதிப் பட்டியல் என தெரிவிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். தவெக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட ஆட்சியர் மற்றும் தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களது கட்சித் தலைவரும், முதலமைச்சருமான விஜய், தனது ஆட்சியில் லஞ்சம், ஊழல், விதிமீறலுக்கு இடமளிக்க மாட்டேன் என்று கூறியிருக்கும் நிலையில், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சட்டத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கு இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தனக்கும் வாய்ப்பு வழங்கி நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை அரசு வெளியிட்டுள்ள நியமன அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P