Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 02 ஜூலை (ஹி.ச.)
புதுச்சேரியில் இயங்கி வரும் எம்ஆர்எஃப் டயர் தொழிற்சாலை, மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடப்படுவதாக அந்நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொழிற்சாலையின் தொடர் இயக்கத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களின் இருப்பு குறைந்துள்ளதால், உற்பத்தியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மேலாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு முதல் தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
மூலப்பொருட்களின் வரத்து சீரான பின்னர், தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான தேதி முறைப்படி அறிவிக்கப்படும் எனவும் நிர்வாகம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலப்பொருள் தட்டுப்பாட்டை சரிசெய்ய நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் உற்பத்தியை மீண்டும் தொடங்க எதிர்பார்ப்பதாகவும் தொழிற்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தொழிற்சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக (2021 முதல்) பணிபுரிந்து வரும் 65 தொழிலாளர்களை இன்னும் பணி நிரந்தரம் செய்யாமல், பயிற்சித் தொழிலாளர்கள் (Trainees / Apprentices) என்றே கூறி நிர்வாகம் ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐந்தாண்டு உழைப்பிற்குப் பிறகும், தொழிலாளர்களைப் புதிய ஒப்பந்தங்களில் கட்டாயக் கையெழுத்திடச் சொல்லி நிர்வாகம் வற்புறுத்துவதாகத் தொழிற்சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கூலி அல்லது உரிய பணிப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த தற்காலிக கதவடைப்பால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b