புழல் சிறையில் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு கூடுதல் நேரம் - உயர்நீதிமன்றத்தில் சிறை நிர்வாகம் உறுதி
சென்னை, 02 ஜூலை (ஹி.ச) புழல் மத்திய சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு வழக்கறிஞர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என்று சிறை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,
Puzhal


சென்னை, 02 ஜூலை (ஹி.ச)

புழல் மத்திய சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு வழக்கறிஞர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என்று சிறை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், புழல் சிறையில் கைதிகளை சந்திக்க தற்போது ஒதுக்கப்படும் நேரம் மிகவும் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு தேவையான சட்டரீதியான ஆலோசனைகளை முழுமையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால், வழக்கறிஞர்கள் தங்களது கடமையை முழுமையாக நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்படுவதாகவும், கைதிகளின் சட்ட உரிமைகளும் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

எனவே, கைதிகளை சந்திப்பதற்கான நேரத்தை அதிகரிக்கவும், அதற்கான போதிய வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையக்குழு சார்பில் புழல் சிறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், வழக்கறிஞர்கள் கைதிகளை சந்திப்பதற்கான அடிப்படை வசதிகள் தற்போது சிறையில் போதுமான அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புழல் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான தரப்பில், கைதிகளை சந்திப்பதற்காக தற்போது வழங்கப்படும் நேர ஒதுக்கீட்டு (ஸ்லாட்) எண்ணிக்கையை 6-இலிருந்து 8-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், வழக்கறிஞர்கள் கைதிகளை சந்திப்பதற்கு கூடுதல் நேரம் கிடைப்பதுடன், அவர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை விரிவாக வழங்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.

இந்த உறுதிமொழியை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பின்னர் ஒத்திவைத்தது.

Hindusthan Samachar / P YUVARAJ