ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் விதிமீறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் - ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதில் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறி விளம்பரம் ச
ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் விதிமீறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் - ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதில் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

விதிகளை மீறி விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகபட்சமாக ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

வீட்டு மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை விளம்பரப்படுத்தும்போது, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள பதிவு எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்பதை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஒழுங்குமுறை ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்படாத எந்த ஒரு வீட்டுமனை அல்லது கட்டுமான திட்டத்தையும் விளம்பரப்படுத்தக் கூடாது. அவ்வாறு பதிவு செய்யாமல் விளம்பரம் செய்தால், திட்ட மதிப்பீட்டுக்கு ஏற்ப ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், விளம்பரங்களில் சந்தை விலையுடன் ஒப்பிட்டோ அல்லது பிற நிறுவனங்களின் வீட்டுமனை திட்டங்களுடன் ஒப்பீடு செய்தோ வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விளம்பரம் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

தவறான தகவல்களை அளித்து பொதுமக்களை திசை திருப்பும் விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், வீடு வாங்குவோரின் நலன்களை பாதுகாக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

எனவே, விளம்பரதாரர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள் அனைவரும் இந்த விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் 2016-ன் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b