Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 02 ஜூலை (ஹி.ச)
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் அளித்துள்ள கடிதத்தில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் கட்சிக்காக உழைத்தவர்களும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் கட்சியை வளர்த்தவர்களும் அனைவருக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை.
எனவே, எனக்கும், அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்ட பதவிகள் வேண்டாம் என்றும், சாதாரண உறுப்பினர்களாகவே தொடர விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளோம்.
நாங்கள் தெளிவாக விளக்கம் அளித்திருந்தாலும், அதைப் பற்றி தேவையற்ற யூகங்கள் கூறப்பட்டு வருகின்றன. வழக்கமாக கூட்டத்திற்கு வளர்மதி அழைப்பு விடுப்பார். இந்த முறை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.
நாங்கள் ஏற்கனவே கடிதம் அளித்திருந்ததால், கூட்டத்திற்கு அழைக்காமல் இருந்திருக்கலாம்.
நான் குறிப்பிட்ட 'ஜாம்பவான்கள்' என்ற சொல்லின் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் சிலர் விமர்சிக்கின்றனர்.
கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்த மூத்த நிர்வாகிகளைத்தான் அந்த வார்த்தையால் குறிப்பிட்டேன்.
அதிமுக வலுவாக இருக்க வேண்டும்.
அதற்காக பொதுச் செயலாளர் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம், என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ