Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 02 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 10-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.
முதற்கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 4-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றன.
தொடர்ந்து 2-வது கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 18-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன.
இந்த தொடரையொட்டி 8 அணிகளும் இணைந்து சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் தன்வர், டி. நடராஜன் உள்ளிட்ட 103 வீரர்களை தக்கவைத்துள்ளன.
மேலும் 56 வீரர்களை விடுவித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நாளை பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.) அரங்கில் நடைபெறுகிறது.
இந்த ஏலத்தில் மொத்தம் 783 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் ஏ பிரிவில் எந்த வீரரும் இடம்பெறவில்லை. பி, சி மற்றும் டி பிரிவுகளில் உள்ள வீரர்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தின் மூலம் அணிகள் தங்களுக்குத் தேவையான புதிய வீரர்களை தேர்வு செய்து அணியை பலப்படுத்த உள்ளதால், டி.என்.பி.எல். தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA