சவால் விடுத்து பின்வாங்கியது காங்கிரஸ்தான்,விவாதிக்க தைரியம் இருந்தால் சிறப்பு சட்டப்பேரவையை கூட்டுங்கள் - பிஆர்எஸ் தலைவர் கே.டி.ஆர்.
ஹைதராபாத் , 02 ஜூலை (ஹி.ச.) தெலங்கானா மாநிலக் கடன் மற்றும் குருகுல கல்வி நிறுவனங்களில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விவாதிக்க பிஆர்எஸ் தயாராக இருப்பதாக அக்கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் (கே.டி.ஆர்.) மீண்டும் வலியுறுத்தினார்.
A


ஹைதராபாத் , 02 ஜூலை (ஹி.ச.)

தெலங்கானா மாநிலக் கடன் மற்றும் குருகுல கல்வி நிறுவனங்களில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விவாதிக்க பிஆர்எஸ் தயாராக இருப்பதாக அக்கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் (கே.டி.ஆர்.) மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் முதலில் சவால் விடுத்த காங்கிரஸ் தலைவர்களே தற்போது பின்வாங்கியுள்ளதாகவும், விவாதிக்க உண்மையிலேயே தைரியம் இருந்தால் மாநில அரசு சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி முழுமையான விவாதத்திற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தெலங்கானா பவனில் நிருபர்களிடம் பேசிய கே.டி.ஆர்.,

முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முதலில் இந்த விவகாரத்தில் விவாதத்திற்கு சவால் விடுத்ததாகவும், அதனை பிஆர்எஸ் ஏற்றுக்கொண்ட பிறகு காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் கூறினார்.

அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணாராவ் தெலங்கானா பவனுக்கு வருவதாக அறிவித்துவிட்டு பின்னர் கன் பார்க் சென்றது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய அவர், சவால் விடுப்பவர்கள் அதை எதிர்கொள்ளும் தைரியமும் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

கன் பார்க் நோக்கிச் சென்ற முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவ் மற்றும் பிஆர்எஸ் நிர்வாகிகளை போலீசார் தடுத்து கைது செய்ததை கே.டி.ஆர். கடுமையாகக் கண்டித்தார். எந்த விவகாரத்திலும் திறந்தவெளி விவாதம் நடத்த அரசுக்கு தைரியம் இல்லை என்றும், கைது செய்யப்பட்ட ஹரீஷ் ராவ் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாநிலக் கடன் மற்றும் குருகுல கல்வி நிறுவனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை முன்வைக்க சபாநாயகர் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில் கன் பார்க் பகுதியில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணாராவ், தாம் விடுத்த சவால் கே.டி.ஆர். அல்லது ஹரீஷ் ராவுக்கல்ல என்றும், முன்னாள் முதல்-மந்திரி கே. சந்திரசேகர் ராவுக்கே என்றும் தெரிவித்தார்.

மாநிலக் கடன் தொடர்பாக தாம் வெளியிட்டுள்ள கணக்குகள் தவறு என்று நிரூபிக்கப்பட்டால், அமைச்சர் பதவியுடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA