திருவள்ளூரில் 4 வயது சிறுமியை முட்டி தூக்கி வீசிய காளை மாடு
திருவள்ளூர், 02 ஜூலை (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியில், வீட்டின் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை காளை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி
மாடு


திருவள்ளூர், 02 ஜூலை (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியில், வீட்டின் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை காளை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

வேப்பம்பட்டு பாலாஜி நகரைச் சேர்ந்த புகழேந்தி என்பவரின் 4 வயது மகள் யாழினி, நேற்று மாலை வீட்டின் அருகே மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த காளை மாடு, அங்கு நின்றிருந்த சிறுமியை திடீரென முட்டி தூக்கி வீசியது. இதில் கீழே விழுந்த சிறுமி, பின்னர் எழுந்து அழுதபடி பெற்றோரிடம் சென்றார்.

இதையடுத்து, சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிருக்கு ஆபத்தின்றி சிறுமி தப்பியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், மாடுகளின் உரிமையாளர்கள் கால்நடைகளை கட்டுப்பாடின்றி தெருக்களில் அவிழ்த்து விடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து புகார் தெரிவித்தாலும், இனி நடக்காது என்று கூறிவிட்டு செல்வதாகவும், சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தெருக்களில் கால்நடைகளை கட்டுப்பாடின்றி விடும் உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam