Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 02 ஜூலை (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவில் பகுதியில் பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 வயது மாணவி உயிரிழந்தார்.
மேலும் 4 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளகோவில் அருகே பழனிசாமி நகரில் இருந்து நாட்டராயன் கோவில் வழியாக, வெள்ளகோவில் புனித அமலா அன்னை மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கு மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி வேன், சாலையின் வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 5 மாணவிகளில் நான்கு பேருக்கு கை, கால்களில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.
நந்திதா (12) என்ற மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்திதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த பொன்தாரணிகா (14), தனுஸ்ரீ (14), மோகனபிரியா (12), கவின்யா ஸ்ரீ (11) ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குப் பிறகு ஆம்னி வேன் ஓட்டுநர் பூபதி லேசான காயங்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகள் விபத்தில் சிக்கி, ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam