குதிரை பேரம் புகாரில் முதல்வர் விஜயை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் - டிடிவி தினகரன்
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கர
டிடிவி தினகரன்


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக பேசிய அவர்,

சட்டமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே குதிரை பேரம் நடந்ததாக முதலில் கூறியது நான்தான். அமமுக சட்டமன்ற உறுப்பினரிடம் திருட்டுத்தனமாக கையெழுத்து பெற்று ஆதரவு பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், முதலமைச்சர் விஜயை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றார்.

மேலும், திமுக கூட்டணியின் இரவல் ஆதரவில்தான் தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்துள்ளது. 2006-ல் கருணாநிதி ஆட்சி அமைத்தது போல இந்த ஆட்சி அமையவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுக கூட்டணி குறித்து பேசிய டிடிவி தினகரன், அம்மாவின் தொண்டன் என்ற அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். அந்த கூட்டணி தொடரும். ஆளுங்கட்சிக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சியில் சேர விரும்பினால், அதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசத் தயாராக இருக்கிறேன் என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விமர்சித்த அவர், திமுகவை வைகோ முதுகில் குத்தியுள்ளார். அதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது என்று கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சித்த டிடிவி தினகரன், 126 சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை அக்கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் வழக்குகளை எதிர்கொண்ட முன்னாள் அமைச்சர்களை கட்சியில் சேர்த்துவிட்டு தங்களை தூய சக்தி என்று கூற முடியாது. தமிழக வெற்றிக் கழகம் தூய சக்தி அல்ல; நாச சக்தி என்று விமர்சித்தார்.

அமைச்சர் நிர்மல் குமார், திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் ஸ்டாலினை பார்த்து, சின்னப் பையன் நிர்மல் குமார் அரசியலை விட்டு விலக வேண்டும் என்று கூறுகிறார். 'அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது என்றார்.

மேலும், அமைச்சர் சரத்குமார் விவகாரத்தைக் குறிப்பிட்டு, அந்த விவகாரத்தில் விஜய் தோல்வி அடைந்துவிட்டார். 'வெள்ளை பவுடர் அமைச்சர்' விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P