Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 02 ஜூலை (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. டாக்டர் என். இளையராஜாவுக்கு ரூ.35 கோடி வழங்கி, சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் குறிப்பிட்ட வகையில் வாக்களிக்கும்படி பேரம் பேசியதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கைது நடவடிக்கையின் மூலம் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, பின்னணியில் செயல்பட்டவர்கள் யார், பணப் பரிமாற்றத்திற்கான திட்டம் எவ்வாறு வகுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் பெயர்களும் புகாரில் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்த குற்றச்சாட்டுகளை திமுக தரப்பு மறுத்து, அரசியல் நோக்கத்துடன் சுமத்தப்பட்டவை என விளக்கம் அளித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam