Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 02 ஜூலை (ஹி.ச)
வானதி சீனிவாசன், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் பெறப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மனு தொடர்பாக எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தவெக தலைமையிலான தமிழக அரசில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தூய சக்தி, ஊழலை ஒழிக்க வந்த ஆட்சி என்று கூறிய தவெக அரசின் உண்மை முகம், ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களிலேயே வெளிப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரே, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் நடைபெறுவதாக மனு அளித்திருப்பது மேலும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு மாற்றாக ஊழலற்ற ஆட்சி அமையும் என்று நம்பிய மக்களுக்கு, தவெக அரசும் அதே பாதையில் செல்வதை நிரூபித்து வருவதாக குற்றம்சாட்டிய வானதி சீனிவாசன், ரீல்ஸ் ஆட்சி, குதிரை பேரம், லஞ்சப் புகார்கள் என தமிழக மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறுதியாக, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்து, தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ