அதிமுகவில் தேர்தல் தோல்வி குறித்து தீவிர ஆலோசனை - மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் சந்திப்பு
சென்னை, 20 ஜூலை (ஹி.ச) சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல
Eps


சென்னை, 20 ஜூலை (ஹி.ச)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிந்தைய கட்சியின் நிலை, அமைப்பு வலுப்படுத்தும் பணிகள், உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட அளவிலான செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

காலை நேரத்தில் மதுரை மாவட்ட நிர்வாகிகளுடனும், முற்பகலில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார்.

இதற்கிடையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கட்சிக்குள் நிலவும் சூழல் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ