Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 ஜூலை (ஹி.ச)
வன்னியர் சங்கத்தின் 47-ஆவது தொடக்க நாளை முன்னிட்டு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து, அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சமூகநீதிக் காவலர் மருத்துவர் எஸ். ராமதாஸ் தொடங்கிய வன்னியர் சங்கம், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு முழுமையான சமூகநீதியைப் பெற்றுத்தரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் முக்கியமான நாள் என்றும், அன்றைய தினம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துதல், மக்கள்தொகை அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குதல், வன்னியர்களுக்கு மாநிலத்தில் 20 சதவீதமும் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 2 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்குதல், பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய சமூகநீதி போராட்டம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ள நிலையில், அது சமூகநீதிப் போராட்டத்தின் முதல் மைல்கல் என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை நிலைநாட்டுவதே இறுதி இலக்கு என்றும், அதனை அடைய வன்னியர் சங்கத்தின் 47-ஆவது தொடக்க நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ