ராமாயபட்டினம் துறைமுகம் விவகாரம் - கூட்டணி அரசு மீது ஜெகன் மோகன் ரெட்டி கடும் குற்றச்சாட்டு
அமராவதி , 20 ஜூலை (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தில் உள்ள ராமாயபட்டினம் துறைமுகத்தை தனியாருக்கு ஒப்படைக்க தற்போதைய தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி அரசு முயற்சி செய்து வருவதாக, முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோ
A


அமராவதி , 20 ஜூலை (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தில் உள்ள ராமாயபட்டினம் துறைமுகத்தை தனியாருக்கு ஒப்படைக்க தற்போதைய தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி அரசு முயற்சி செய்து வருவதாக, முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்:

ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான ராமாயபட்டினம் துறைமுகம், சிலரின் நலனுக்காக பயன்படுத்தப்படுவதாக விமர்சித்துள்ளார்.

தனது ஆட்சிக் காலத்தில் ராமாயபட்டினம், மச்சிலிப்பட்டினம் மற்றும் மூலபேட்டா துறைமுகத் திட்டங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துதல், சட்ட அனுமதிகள், நிதி ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டதாக ஜெகன் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டுமானப் பணிகளும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

ராமாயபட்டினம் துறைமுகம் மூலம் மாநிலத்திற்கு பெரிய அளவில் தொழில் முதலீடுகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அமைக்க உள்ள ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டிலான எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டத்துக்கு இந்த துறைமுகம் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தோசோல் நிறுவனத்தின் மிகப்பெரிய சோலார் உற்பத்தி திட்டம் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்தின் தொழிற்சாலை தேவைகளுக்கும் ராமாயபட்டினம் துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜெகன் கூறியுள்ளார்.

ரூ.4,929 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த துறைமுகத்தை ரூ.1,500 கோடி முன்பணத்துக்கு தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் மாநில அரசுக்கு ரூ.3,500 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல், சிலரின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது என்ன வகையான பொருளாதார கணக்கு? என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை ஜெகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA