நள்ளிரவில் அம்மன் சிலையுடன் வெளியேறிய பெண் என்ஜினீயர்- கோவில் குளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்பு
நகரி , 20 ஜூலை (ஹி.ச.) ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி (25). பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்த அவர், கடுமையான பணிச்சுமை காரணமாக சுமார் 6 மாதங்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய
A


நகரி , 20 ஜூலை (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி (25). பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்த அவர், கடுமையான பணிச்சுமை காரணமாக சுமார் 6 மாதங்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு தனது தாயாருடன் ஐதராபாத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில், வீட்டில் இருந்த தனது தாயாரை உள்ளே வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தேஜஸ்வினி வெளியேறியதாக கூறப்படுகிறது.

பின்னர் தனது உடைகளை களைந்த அவர், கையில் ஒரு புடவையை ஏந்தியபடி அருகில் உள்ள பீரம்மா கோவிலுக்குச் சென்றதாகவும், அங்கிருந்த அம்மன் சிலையை எடுத்துக்கொண்டு கோவில் குளத்தில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.

மறுநாள் காலை வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வெளியே வந்தார். மகளை பல இடங்களில் தேடியபோது, கோவில் குளத்தில் அவரது உடல் மிதந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தேஜஸ்வினி எடுத்துச் சென்றதாக கூறப்படும் அம்மன் சிலை காணாமல் போனதால், அதை கோவில் குளத்தில் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கின் முக்கிய ஆதாரமாக கருதப்படும் அந்த சிலையை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், தனது மகளுக்கு சமீபகாலமாக அடிக்கடி பயங்கர கனவுகள் வந்ததாகவும், அவர் மனநல சிகிச்சை பெற்று வந்ததாகவும் தேஜஸ்வினியின் தாயார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA