Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 20 ஜூலை (ஹி.ச)
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தொழு கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை நீர்வீழ்ச்சியான மேகமலை அருவி தேனி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுருளி அருவியைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதால், இது பரவலாக சின்னச் சுருளி அருவி என்றும் அழைக்கப்படுகிறது
இது வற்றாத ஒரு அருவியாகும். வருடம் முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும்.அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் வனத்துறையினர் தற்காலிகமாகப் பயணிகள் குளிக்கவும், அருவிக்குச் செல்லவும் தடை விதித்துள்ளனர். இந்த தடை இன்று 4வது நாளாக தொடர்வதாக வனத்துறை அறிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலை அருவிப் பகுதியில், தொடர் மழை காரணமாக சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், நடைபாதைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை இந்த தடையை விதித்துள்ளது.
தற்போது அருவிப் பகுதியில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பணிகள் முழுமையாக நிறைவடைந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b