Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகம் முன்பு வீடு வழங்கக் கோரி 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியமேடு சாலையோரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்கள், தங்களுக்கு நிரந்தர வீடு ஒதுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, முந்தைய திமுக ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், வீடு ஒதுக்கப்படாததால் தலைமைச் செயலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கைக்குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்த பொதுமக்கள், விஜய் மாமா... வீடு தாங்க என்ற வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அமைதியாக கலைந்து செல்லச் செய்தனர்.
இதனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ