Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 20 ஜூலை (ஹி.ச.)
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன் என்று விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முதலமைச்சர் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி வருவதாகவும், இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதல்கள் அரசியல் நாகரிகத்திற்கு எதிரானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்குச் சேவை செய்வதற்கான தளமாக அரசியலைப் பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாகக் கருதியதன் விளைவாகவே தோல்வி விரக்தியில் இதுபோன்ற அநாகரிகமான பேச்சுகள் இடம்பெறுகின்றன என்றும் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்ற வகையில் பேசியதாகக் கூறப்படும் மார்க்கண்டேயன் மீது சட்டப்பேரவைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம் என்றும் தனது அறிக்கையில் வன்னி அரசு குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam