Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)
ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளன.
தங்களது நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய உயர்வு, ஊதிய மாற்றம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வேறு வழியின்றி போராட்டக் களத்தில் இறங்கியுள்ளதாக ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடை ஊழியர்களும் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகள் இன்று திறக்கப்படவில்லை.
ரேஷன் கடைகள் திடீரென மூடப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை வாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b