Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)
விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தள பதிவில்,
ஜனநாயகப் பண்புகள் இல்லாமல் த.வெ.க. அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சியில் நடைபெறும் தவறுகள் மற்றும் அவலங்களைச் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இணைய ஆதரவாளர்களை தொடர்ந்து குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அவதூறு வழக்குகளில் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகள் சேர்க்கப்படுவது குறித்து நீதிமன்றம் அண்மையில் அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்ததையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனுக்கு அவரது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இது அடிப்படைச் சட்ட உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியா அல்லது சாத்தானின் ஆட்சியா நடைபெறுகிறது என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், ஆளுங்கட்சியினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்காத அரசு, அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் உடனடியாக கைது நடவடிக்கையில் ஈடுபடுவதாக விமர்சித்துள்ளார்.
இறுதியாக, ஆட்சியாளர்களின் சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றுவது காவல்துறையின் பணி அல்ல என்றும், சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்பட வேண்டும் என்றும், இல்லையெனில் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் காவல்துறையினருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P