Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 20 ஜூலை (ஹி.ச.)
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை மீட்டு பாதுகாக்கவும், கோவிலை புனரமைத்து விரைவாக குடமுழுக்கு நடத்தவும் உத்தரவிடக் கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு விசாரித்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வீரவசந்தராயர் மண்டபப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், புதிய நவீன சமையலறை அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அனைத்து பணிகளும் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்றும், மீனாட்சி அம்மன் கோவிலின் குடமுழுக்கு விழா செப்டம்பர் 17-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கோவில் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இதற்கு மனுதாரர் தரப்பில், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை என்றும், தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் வசூலிக்கப்பட வேண்டிய தொகைகளும் இதுவரை வசூலிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பின் வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P