ஜூஜூவாடி சோதனை சாவடியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் - திருவள்ளூரைச் சேர்ந்த ஓட்டுநர் கைது!
கிருஷ்ணகிரி, 20 ஜூலை (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஜூஜூவாடி சோதனை சாவடியில், போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமைக் காவலர் வள்ளல்
Hosur


கிருஷ்ணகிரி, 20 ஜூலை (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஜூஜூவாடி சோதனை சாவடியில், போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமைக் காவலர் வள்ளல் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர் சபரி ஆகியோர் அடங்கிய குழுவினர், பெங்களூர் மடிவாளாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற KBS டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்தப் பேருந்து சோதனையின்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பையுடன் இருந்த பயணி ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

அவரது பையைச் சோதனையிட்டபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, கஞ்சாவைக் கடத்தி வந்த திருவள்ளூர் மாவட்டம், பாடிகுப்பம், காமராஜர் தெருவைச் சேர்ந்த விஷ்ணு (23) என்ற இளைஞரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட விஷ்ணுவிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெங்களூர் மடிவாளா, பி.டி.எம் லே-அவுட் பேருந்து நிறுத்தம் அருகில் வைத்து, சரன் என்பவர்தான் இந்த 3 கிலோ கஞ்சாவைக் கொடுத்து சென்னைக்குக் கடத்திச் செல்லச் சொன்னார் என்றதகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட விஷ்ணுவையும், பறிமுதல் செய்யப்பட்ட 3 கிலோ கஞ்சாவையும் ஜூஜூவாடி சோதனை சாவடி போலீஸார், மேல் நடவடிக்கைக்காக ஓசூர் சிப்காட் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பெங்களூரில் கஞ்சா சப்ளை செய்த சரன் யார்? இதன் பின்னணியில் உள்ள கும்பல் எது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN