Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 20 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் கொடைக்கானலில், கடந்த சில மாதங்களாகவே கஞ்சா மற்றும் காளான் விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கொடைக்கானல் அருகே ஆன்மீக சுற்றுலா தலமாக விளங்கக்கூடிய பூம்பாறை பகுதியில், தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. அந்த விடுதியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், அந்த தனியார் விடுதியில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் கொக்கேன், mmda, கஞ்சா உள்ளிட்ட பல வகைகளான அயல்நாட்டு போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தனியார் விடுதியில் உரிமையாளரான போதி சாத்விக் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டோம். அப்போது, அவர் கோவாவில் இருந்து இந்த அயல்நாட்டு போதைப் பொருட்களை வாங்கி வந்திருப்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்டு இருக்கக்கூடிய போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் வரை இருக்கும்.
கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், போதைப் பொருட்களை வைத்து தன்னுடைய விடுதியில் ரேவ் பார்ட்டி நடத்த திட்டமிட்டு இருக்கிறாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தனியார் விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட தனியார் விடுதிக்கு சீல் வைக்கப்படும். போதைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.
கொடைக்கானலில் நாளுக்கு நாள் போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாகி வரக்கூடிய நிலையில், அப்பகுதியில் திடீரென்று அயல் நாட்டு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடைக்கானலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 கிலோவிற்கு மேல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN