Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 20 ஜூலை (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த எலுமிச்சம்பள்ளம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் மற்றும் இரண்டு வயது குழந்தை படுகாயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், குப்பனத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சதாம்உசேன் (32). இவர் தனது மனைவி சபீனா (26) மற்றும் இரண்டு வயது குழந்தையுடன், குப்பநத்தம் பகுதியிலிருந்து ஊத்தங்கரை வழியாக தர்மபுரி மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் போச்சம்பள்ளி அடுத்த ஓலைப்பட்டி சிப்காட் அருகே உள்ள எலுமிச்சம்பள்ளம் பகுதியை கடக்க முயன்றனர். அப்போது, காரிமங்கலத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வைக்கோல் ஏற்றுவதற்காக எதிரே வந்த டாட்டா ஏசி வாகனம் மீது இவர்களது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த கொடூர விபத்தில், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த சபீனா (26) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும், சதாம்உசேன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கவலைக்கிடமான நிலையில் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர்களது இரண்டு வயது குழந்தை சிறு காயங்களுடன் தப்பித்தது. அந்த குழந்தைக்கு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புலியூரில் இருந்து சிப்காட் வரை செல்லும் சாலை ஒருவழிச்சாலையாக உள்ளது. இங்கு இயங்கும் தொழிற்சாலைகளுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் நாள்தோறும் காலையும் மாலையும் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. இந்த அதிவேகமே தொடர் விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சபீனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN