வேளாண்மைக்கு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் - பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு!!
தமிழ்நாடு, 20 ஜூலை (ஹி.ச.) பாமக சார்பில் வெளியிடப்பட்ட வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில், வேளாண் மேம்பாடு, விவசாயிகள் நலன் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அறிக்கையை வெளியிட்டு பேசிய பாமக தலைவர் டா
நிதி நிலை அறிக்கை


தமிழ்நாடு, 20 ஜூலை (ஹி.ச.)

பாமக சார்பில் வெளியிடப்பட்ட வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில், வேளாண் மேம்பாடு, விவசாயிகள் நலன் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

அறிக்கையை வெளியிட்டு பேசிய பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்,

தமிழகத்தில் சுமார் 15 ஆயிரம் ஏரிகள் காணாமல் போயுள்ளன. சென்னையில் மட்டும் 250 ஏரிகள் அழிந்துள்ளன. இதற்கு எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்ளிட்ட முந்தைய ஆட்சிகள் அனைத்தும் காரணம் என்று விமர்சித்தார்.

வேளாண் துறைக்கு ஆண்டுதோறும் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.5,000 சிறப்பு மானியம் வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து அரசே ஏற்க வேண்டும், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.5,000 ஆகவும் உயர்த்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

அனைத்து வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்யும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும், உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத்தொகையை மூன்று தவணைகளில் வழங்க வேண்டும், ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டத்தை மூன்று ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும், அத்திக்கடவு–அவிநாசி 2.0 மற்றும் கோதாவரி–காவிரி இணைப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது, வேளாண் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், காவிரி பாதுகாப்பு வேளாண் மண்டலத்தை 9 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும், சிப்காட் தொழிற்பேட்டைகளுக்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும், திண்டிவனத்தில் புதிய வேளாண் கல்லூரி, புதிய தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் மற்றும் மேலும் மூன்று வேளாண் பல்கலைக்கழகங்களை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளும் நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam