Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி , 20 ஜூலை (ஹி.ச.)
தூத்துக்குடி மாநகரின் அடையாளமாகவும், முத்து நகர மக்களின் நம்பிக்கை சின்னமாகவும் விளங்கும் தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா ஜூலை 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னையின் தங்கத் தேர் பவனி மற்றும் சப்பர பவனி வீதி உலா வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காகவும், திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷூ மகாராஜன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி, இந்த உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 05.08.2026 அன்று அரசுத் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், தொடர்புடைய பணியாளர்களுக்கும், அத்தியாவசியப் பணிகளுக்கும் இந்த விடுப்பு பொருந்தாது.
மாவட்டக் கருவூலம், சார்நிலை கருவூலங்கள் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு வழக்கம் போல் செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, வரும் 08.08.2026 இரண்டாவது சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வழக்கமான அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b