விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ கைது - கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி கண்டனம்
தூத்துக்குடி, 20 ஜூலை (ஹி.ச.) ஜூலை 18ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியுள்
MLA Karunanidhi


தூத்துக்குடி, 20 ஜூலை (ஹி.ச.)

ஜூலை 18ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளார்.

இதையடுத்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது மிரட்டல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெறுப்புணர்வைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த விளாத்திகுளம் காவல்துறையினர், இன்று (ஜூலை 20) அதிகாலை அவரது வீட்டிற்கு சென்று அதிரடியாக கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட திமுக எம்எல்ஏவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோவில்பட்டி திமுக எம்எல்ஏ கருணாநிதி,

விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசிய பேச்சுக்கு அமைப்புச் செயலாளர் விளக்கம் கொடுத்துவிட்டார்.

கரூர் சம்பவத்தின்போது முட்டாள் முதலமைச்சர் என்று எல்லாம் கூறினார்கள்.

அப்போது நாங்கள் எதுவும் செய்யவில்லை. கருத்து சுதந்திரம் கொடுக்கக் கூடிய நாட்டில் அராஜக முறையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இந்த அளவுக்கு மோசமாக இருக்கிறார்கள்.

சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மேலிருந்து யாரும் சொல்லி கைது செய்யப்படுகிறார்களா? என்று தெரியவில்லை. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அன்று திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இன்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

மிரட்டலுக்கு நாங்கள் அசருவது கிடையாது. நாங்கள் இப்படித்தான் இருப்போம். கைது செய்யப்பட்டது முறையாக நடக்கவில்லை. எம்எல்ஏ கைது செய்யப்படுவதற்கு முன்பு சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டும்.

அனுமதி கொடுத்த பின்புதான் கைது செய்ய வேண்டும். ஆனால் அது முறையாக நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Hindusthan Samachar / ANANDHAN