13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - ஆகஸ்ட் 3 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் எச்சரிக்கை
பெரம்பலூர், 20 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியரிடம்
ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர், 20 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.

மாவட்ட கவுரவச் செயலாளர் வி. கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நியாய விலைக் கடைகள் மூலம் செயல்படுத்தப்படும் தாயுமானவர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும், 2021-க்கு பிறகு ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான கருணைத்தொகையை உயர்த்த வேண்டும், பணியாளர்களுக்கான பணிக்கொடையை அரசு ஊழியர்களுக்கு இணையாக ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், சங்கச் செயலாளர்களுக்கு குறைந்தபட்ச நிர்வாக அதிகாரம் வழங்க வேண்டும், 01.04.2023-க்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கும் புதிய ஊதிய நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற பணியாளர்கள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கவுரவச் செயலாளர் வி. கணேசன்,

எங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 55 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என

500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam