உடன்குடி கருப்பட்டியில் சர்க்கரை கலப்படம் - 5 வியாபாரிகளுக்கு ரூ.38 கோடி அபராதம் செலுத்த உத்தரவு
தூத்துக்குடி, 20 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் பனை கருப்பட்டி அதன் தனித்துவமான சுவைக்காகவும், மருத்துவ குணத்திற்காகவும் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இதற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி அங்
உடன்குடி கருப்பட்டியில் சர்க்கரை கலப்படம் - 5 வியாபாரிகளுக்கு ரூ.38 கோடி அபராதம் செலுத்த உத்தரவு


தூத்துக்குடி, 20 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் பனை கருப்பட்டி அதன் தனித்துவமான சுவைக்காகவும், மருத்துவ குணத்திற்காகவும் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது.

இதற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில், அசல் கருப்பட்டியுடன் வெள்ளை சர்க்கரையை கலந்து, கலப்படம் செய்து விற்பனை செய்வதாக ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய கருப்பட்டி வியாபாரிகளின் குடோன்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது மாதிரிகளை கைப்பற்றி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பியதில், பெரும்பாலான கருப்பட்டியில் 30 சதவீதத்திற்கும் மேல் சர்க்கரை கலக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த கலப்பட மோசடி தொடர்ந்து நடைபெற்று வந்ததும், இதன் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை ஏய்ப்பு செய்ததும் தெரியவந்தது. கருப்பட்டிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சர்க்கரை கலந்த கலப்பட கருப்பட்டியை விற்பதன் மூலம் முறைகேடாக லாபம் ஈட்டியுள்ளனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 5 பெரும் வியாபாரிகளுக்கு மொத்தமாக ரூ.38 கோடி அபராதம் விதித்து ஜிஎஸ்டி துறையினர் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த கலப்படத்தில் ஈடுபட்ட மற்ற வியாபாரிகள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் உடன்குடி கருப்பட்டியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகளும், நுகர்வோரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b