தேசிய போலீஸ் அகாடமியில் பெண் பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை...!
ஹைதராபாத் , 20 ஜூலை (ஹி.ச.) ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் (SVPNPA) பெண் பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், சக பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரி உதய் கிருஷ்ணா ரெட்டி மீது போலீசார் வழக
A


ஹைதராபாத் , 20 ஜூலை (ஹி.ச.)

ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் (SVPNPA) பெண் பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், சக பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரி உதய் கிருஷ்ணா ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டின் உயரிய போலீஸ் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான தேசிய போலீஸ் அகாடமியில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தாபூர் போலீசில் பெண் ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரி அளித்த புகாரில், தன்னுடன் பயிற்சி பெற்று வரும் உதய் கிருஷ்ணா ரெட்டி தன்னை சில காலமாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 9-ந் தேதி உதய் கிருஷ்ணா ரெட்டி தன்னை ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று, முடியை பிடித்து இழுத்து, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக பெண் அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தனது அனுமதியின்றி தனிப்பட்ட வீடியோக்களை பதிவு செய்ததாகவும், செல்போனை பறித்து அந்த வீடியோக்களை தனது கணவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் அத்தாபூர் போலீசார், உதய் கிருஷ்ணா ரெட்டி மீது இந்திய நீதிச் சட்டத்தின் (BNS) கீழ் 74, 75, 77, 315(2) ஆகிய பிரிவுகளிலும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66(C) பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA