ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு- தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்
மகபூப்நகர் , 20 ஜூலை (ஹி.ச.) தெலுங்கானா மாநிலத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்குகுடம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்
A


மகபூப்நகர் , 20 ஜூலை (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்குகுடம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு ஏற்கனவே 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், பிறந்து சில வாரங்களே ஆன அந்த குழந்தையை, மகபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இடைத்தரகர் மூலம் ரூ.1 லட்சத்திற்கு பெற்றோர் விற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் மகபூப்நகர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், குழந்தையை வாங்கிய நபர் மற்றும் இடைத்தரகர் மீது போலீசார் கடந்த 17-ந் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மகபூப்நகர் நகரில் வாங்குபவரின் வசம் இருந்த பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டனர்.

பின்னர் அந்த குழந்தை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தையை பெற்றோர் விற்பனை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA