சென்னை திருவல்லிக்கேணியில் கள்ளநோட்டு வழக்கில் சர்வதேச தொடர்பு? – என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்ற போலீஸ் பரிசீலனை
சென்னை, 20 ஜூலை (ஹி.ச.) சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.11.9 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சர்வதேச தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதால், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மாற்ற சென்ன
கள்ளநோட்டு


சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)

சென்னை

திருவல்லிக்கேணியில் ரூ.11.9 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சர்வதேச தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதால், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மாற்ற சென்னை காவல்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 15-ஆம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது, ரூ.500, ரூ.200 மற்றும் ரூ.100 மதிப்பிலான போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக முதற்கட்டமாக டிராவல் ஏஜென்சி நடத்தி வந்த ஷபீக் ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த புவனேஸ்வரி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மேலும் போலி நோட்டுகள், இந்திய மற்றும் வெளிநாட்டு கரன்சி, பாஸ்போர்ட்கள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், மலேசியாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட கும்பல் மூலம் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் இந்தியாவுக்குள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கும்பலின் சர்வதேச தொடர்புகள், பணப்பரிவர்த்தனை மற்றும் கள்ளநோட்டு விநியோக வலையமைப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சர்வதேச கும்பல் தொடர்பு மற்றும் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் இருப்பதாக கருதப்படுவதால், இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றுவது குறித்து சென்னை காவல்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Hindusthan Samachar / GOKILA arumugam